×

பிரதமர் மோடியால் மணிப்பூர் வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? தமிழக காங்கிரஸ் கேள்வி

சென்னை: பிரதமர் மோடியால் மணிப்பூர் வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? என தமிழக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இதில் 3 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தேவாய் கிராமத்தில், மெய்தி இன இளைஞர்களுக்கும், குகி பழங்குடியின இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குகி சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியால் மணிப்பூர் வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? என தமிழக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் வன்முறையில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் கடந்த பல மாதங்களாக எரிந்து வருகிறது. மக்கள் அச்சம் மற்றும் அச்சத்தின் நிழலில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிரதமர் மோடி, உங்களால் ஏன் வன்முறையை தடுக்க முடியவில்லை? இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

The post பிரதமர் மோடியால் மணிப்பூர் வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? தமிழக காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Manipur ,Tamil Nadu Congress ,Chennai ,tamil nadu ,congress party ,TN Congress ,
× RELATED கருத்துகளை திரித்து பேசும் பிரதமர்...